உச்சநீதிமன்ற நீதிபதிகள் வரும் 12-ஆம் தேதி வரை தசரா விடுமுறையில் இருப்பதால், இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க சிறப்பு அமர்வு ஏற்படுத்தப்படுவதாகவும், அந்த அமர்வு திங்கள்கிழமை (அக். 7) விசாரணை நடத்தும் என்றும் உச்சநீதிமன்ற இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆரே காலனி, ஏராளமான மரங்களைக் கொண்ட வனம் போன்ற பகுதியாகும். அங்கு மெட்ரோ ரயில் பணிமனை அமைக்க முடிவு செய்யப்பட்டதை அடுத்து, அந்தப் பகுதியில் இருக்கும் 2,656 மரங்களை வெட்ட மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பை உயர்நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், அந்த மனுக்களை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, ஆரே காலனி பகுதியில் மரங்களை வெட்டும் பணியை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெள்ளிக்கிழமை இரவே தொடங்கியது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் தாங்கள் உச்சநீதிமன்றத்தை நாட இருப்பதாகவும், அதனால் மரங்களை வெட்டுவதற்கு ஒரு வார காலத்துக்கு தடை விதிக்கக் கோரியும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் மும்பை உயர்நீதிமன்றத்தில் சனிக்கிழமை புதிய மனு தாக்கல் செய்தனர்.